சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகருக்கு அதிலும் குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு இன்றைய தினம் (24.12.2025) அதிகளவான வாகனங்களுடன் மக்கள் வருகை தருவார்கள் என பொலிஸாரால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கொழும்பு நகரின் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை | Warning For Colombo Drivers

எவ்வாறாயினும், இன்று இந்தப் பிரிவுகளில் வழமை போன்று போக்குவரத்து நடைபெறும் எனவும், அதிக வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவசியத்துக்கேற்ப மாற்று வீதிகள் பயன்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.