வடக்கு தொடருந்து பாதை புனரமைப்பு பணிகள் குறித்து வெளியான தகவல்
மஹவ முதல் ஓமந்தை வரையிலான வடக்கிற்கான தொடருந்து பாதையில் விரிவான புனரமைப்புப் பணிகள் குறித்து தொடருந்து திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இந்திய நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் இன்று (11) தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய உதவித் தொகையிலிருந்து சுமார் 5 மில்லியன் டொலர்கள் இந்தக் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் தொடருந்து பாதைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மஹவவிலிருந்து ஓமந்தை வரையிலான தொடருந்து சேவைகள் ஜனவரி 19 முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட தொடருந்து பாதை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் முழுமையாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடருந்து பாதை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை, அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக அலுவலக தொடருந்துகள் மட்டுமே இயங்கும் என்றும் இரவு நேர நீண்ட தூர தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.