கமேனியின் படுகொலையால் அதிரும் சர்வதேசம்: அமெரிக்கா - ஈரானுக்கு ரஷ்யாவின் அவசர அறிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அணுஆயுத ஒப்பந்தத்திற்குப் பிடி கொடுக்காத ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரான் தனது அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
அத்தோடு, ஈரான் முழுவதும் உள்ள அரசு மற்றும் இராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் தொடர்ச்சியாகப் பதிலடி கொடுத்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை நிறுத்தி மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தற்போது நிலவும் பதற்றங்களை உடனடியாகக் குறைக்கவும், வன்முறைகளை நிறுத்தவும், அரசியல் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
ஐ.நா சபையின் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.