உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் கையிருப்பு! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
பண்டிகை காலத்திற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமையை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள தடைகளை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ஏப்ரல் இறுதி வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் அரசாங்கத்தால் எரிபொருளை வழங்க முடியும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கத்தை நிர்வகிக்க உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் சிறப்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றில் மக்களுக்குத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவு உற்பத்தி மற்றும் மீன்வளத் துறைக்கு முன்னுரிமையாக தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கான முறையான வழிமுறையை வகுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், நாட்டில் உணவு உற்பத்திக்குத் தேவையான உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் இறக்குமதியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.