ஹோர்முஸ் நீரிணையை 9 கப்பல்கள் கடந்துள்ளன

ஹோர்முஸ் நீரிணையை 9 கப்பல்கள் கடந்துள்ளன

ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசாங்கம் அனுமதிக்குமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. 

இரண்டு வார கால அமைதி ஒப்பந்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது. 

எனினும், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அந்த கடல்வழிப் பாதையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. 

அத்துடன் தமது கட்டளையை மீறி பயணிக்கும் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மரைன் டிராஃபிக் தளத்தின் கப்பல் கண்காணிப்பு தரவுகளின் படி, செவ்வாய்க்கிழமை இரவு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இரண்டு எண்ணெய் மற்றும் இரசாயன தாங்கிகள் உட்பட குறைந்தது ஒன்பது கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்துள்ளன. 

சர்வதேச கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, போர் தொடங்குவதற்கு முன்னதாக நாளொன்றுக்கு சராசரியாக 138 கப்பல்கள் இப்பகுதியைக் கடந்து சென்றன. 

இருப்பினும், மோதல் நிலைமை காரணமாக இந்த போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், சுமார் 800 கப்பல்கள் இப்பகுதியில் தேங்கியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.