தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: தலைவர் பதவிக்கு களமிறங்கும் ஜஸ்வர் உமர்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: தலைவர் பதவிக்கு களமிறங்கும் ஜஸ்வர் உமர்

தேசிய ஒலிம்பிக் குழுவின் எதிர்வரும் தேர்தலில், இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பல்வேறு விளையாட்டு சங்கங்களின் ஆதரவுடன் அவர் “பொது வேட்பாளர்” ஆக களமிறங்குவதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையை மறுசீரமைக்கும் நோக்கில் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அவரின் தலைமையில் ஒரு பலமான அணி அனைத்து முக்கிய பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தற்போது தேசிய ஒலிம்பிக் குழு எதிர்கொள்ளும் நிதி சிக்கல்கள் மற்றும் நிர்வாக பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய ஜஸ்வர் உமர், வெற்றி பெற்ற 24 மணி நேரத்திற்குள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி புதிய திட்டங்களை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்காது என்றும், வெளிப்படையான முறையில் விளையாட்டுத் துறையை முன்னேற்றுவதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கால்பந்தில் முன்னர் ஏற்பட்ட சர்வதேச தடையை நீக்கி முன்னேற்றம் கண்ட அனுபவத்தைப் போலவே, முழு விளையாட்டுத் துறையையும் உயர்த்துவதே தனது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.