OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்

OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்

உலக எரிசக்தி சந்தையின் முக்கிய பங்குதாரரான ஐக்கிய அரபு அமீரகம், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான OPEC மற்றும் OPEC+ கூட்டணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று (28) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது நாட்டின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதார நோக்கு நிலை, அத்துடன் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால உற்பத்தித் திறன் குறித்த விரிவான ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் 1967 ஆம் ஆண்டு OPEC அமைப்பில் இணைந்ததுடன், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உலக எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

அமைப்பிலிருந்து விலகினாலும், தான் ஒரு பொறுப்புள்ள எரிசக்தி பங்காளியாகத் தொடர்ந்து செயற்படப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது. 

"இந்தத் தீர்மானத்தினால் உலக சந்தையின் ஸ்திரத்தன்மைக்கான எமது அர்ப்பணிப்பில் மாற்றம் ஏற்படாது. சந்தையில் உருவாகி வரும் தேவைகளுக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்கான எமது திறனை வலுப்படுத்துவதையே நாம் செய்கிறோம்" என அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்கால உற்பத்தித் திறனை சந்தை தேவைக்கு ஏற்ப முறையாகவும் நேர்த்தியாகவும் நிர்வகிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.