உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு

உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு

உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட 'ஏஹிபஸ்ஸிகோ'  அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் நிறைவடைந்தது.


கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றினை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையளித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது.


உலக அமைதி குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த அமைதி நடைபயணம், ஏப்ரல் 22ஆம் திகதி தம்புள்ளை ரஜமகா விகாரையில் ஆரம்பமானது. வியட்நாம் தேரர் தலைமையிலான 13 பிக்குகளும், உலகப் புகழ்பெற்ற 'அலோகா'  நாயும் கடந்த 6 நாட்களாக மாத்தளை, கண்டி, பெலிகம்மன, தோலங்கமுவ மற்றும் யக்கல ஆகிய இடங்களைக் கடந்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்தனர்.


இன்று காலை களனி ரஜமகா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்ம கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. நடைபயணத்தின் ஏழாவது மற்றும் இறுதி நாளை முன்னிட்டு, இன்று நண்பகல் களனி ரஜமகா விகாரையிலிருந்து பிக்குகள் குழுவினர் பயணத்தை ஆரம்பித்தனர். வழியெங்கும் பெருமளவிலான பௌத்த பக்தர்கள் திரண்டு இந்த நடைபயணத்தைப் பார்வையிட்டனர்.


இதனைத் தொடர்ந்து, ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றும் புனித தாதுக்களும் சுதந்திர சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பீடத்திற்கு எடுத்து வரப்பட்டன. மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புனித தாதுக்கள் மற்றும் போதி மரக்கன்று என்பன வியட்நாம் தேரரிடம் உத்தியோகபூர்வமாகப் பூசை செய்து வழங்கப்பட்டன.