செவ்வாயின் நிலவுக்கு பெரும் ஆபத்து? மர்மமான முறையில் அழியும் போபோஸ்
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை மற்றும் அலை விளைவுகளால் (Tidal effects), அதன் நிலவுகளில் ஒன்றான போபோஸ் மெல்ல மெல்ல கிரகத்தை நோக்கி இழுக்கப்பட்டு வருகிறது. இறுதியில் இது சிதைந்து ஒரு தூசு வளையமாக (Debris disk) மாறும் என்பது விஞ்ஞானிகள் நீண்ட காலமாக அறிந்த ஒன்றே. ஆனால், இந்த அழிவு நாம் எதிர்பார்த்ததை விட மிக முன்னதாகவே தொடங்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பொதுவாக, விண்பொருள் ஒரு கிரகத்தை எவ்வளவு நெருங்கலாம் என்பதற்கு எல்லை உண்டு. இதுவே 'ரோச் எல்லை' எனப்படுகிறது. செவ்வாய் கிரகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆரத்தைப் போல 1.6 மடங்கு தொலைவில் (சுமார் 3,600 முதல் 5,500 கி.மீ) இந்த எல்லை உள்ளது. ஆனால், பிரான்சின் ஆய்வகத்தைச் சேர்ந்த ஹாரிசன் அக்ருசா மற்றும் பேட்ரிக் மைக்கேல் ஆகியோரின் ஆய்வின்படி, போபோஸ் இந்த எல்லையைத் தொடுவதற்கு முன்பே சிதைந்து உடையும் எனத் தெரியவந்துள்ளது.
விஞ்ஞானிகள் 2 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர். போபோஸின் வடிவம், அதன் பிணைப்புத் திறன் மற்றும் செவ்வாயின் ஈர்ப்பு விசை ஆகியவற்றைக் கணக்கிடுதல். போபோஸை ஒரு 'பாறைக்குவியல்' என வகைப்படுத்தி, அது கிரகத்தை நோக்கி நெருங்கும்போது அதன் ஒவ்வொரு துகளும் எப்படிச் செயல்படும் என்பதை ஆராய்தல். இந்த 2 ஆய்வுகளுமே ஒரே முடிவைத்தான் காட்டுகின்றன.
போபோஸின் 2 முனைகளிலிருந்து அதன் துகள்கள் உதிரத் தொடங்கும். செவ்வாய் கிரகத்தின் ஆரத்தைப் போல 2.25 மடங்கு தொலைவில் இருக்கும்போதே இந்தச் சிதைவு தொடங்கும். 2.15 RM மற்றும் 2.13 RM தொலைவை எட்டும்போது சிதைவு பலமடங்கு அதிகரிக்கும். 2.09 RM தொலைவில், போபோஸின் துகள்கள் இரண்டு மிகப்பெரிய நீரோட்டங்கள் போலப் பிரியத் தொடங்கி, அதன் நிலைத் தன்மை முழுமையாகச் சிதைக்கும். ஆனால், இறுதிக் கட்டத்தை எட்டும் முன்பே ஒரு விபத்து நேரலாம். போபோஸிலிருந்து பிரியும் துகள்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரத் தொடங்கி, மீண்டும் போபோஸ் மீதே அதிவேகமாக வந்து மோதும். இத்தகைய தொடர் மோதல்கள் போபோஸை முழுமையாக அழித்துவிடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த அழிவு நிகழ்வதற்கு இன்னும் 2 கோடி முதல் 5 கோடி ஆண்டுகள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், போபோஸின் உட்புற அமைப்பு மற்றும் அதன் உறுதித் தன்மையை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) இந்த ஆண்டு MMX (Martian Moons eXploration) என்ற விண்கலத்தை ஏவத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் போபோஸின் இறுதி காலம் எப்போது என்பது குறித்த துல்லியமான தகவல்களை வழங்கக் கூடும்.