விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வதேச விண்வெளி நிலையத்தில் 67 நாட்கள்: ஒரு சுவாரஸ்யப் பார்வை
ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் போகிமான் நிறுவனத்தின் புதிய முயற்சியாக 'பிகாச்சு' பொம்மை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட்டுடன் சென்ற பிகாச்சு, சர்வதேச வின்வெளி நிலையத்தில் 67 நாட்கள் தங்கி பூமியை 1,040 முறை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளது.
போகிமான் (Pokémon) ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி, நமது செல்லக் கதாபாத்திரமான 'பிகாச்சு' (Pikachu) பூமி, காடு, மலைகளைத் தாண்டி இப்போது விண்வெளிக்கே சென்று சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ) மற்றும் 'தி போகிமான் கம்பெனி' (The Pokémon Company) இணைந்து நடத்திய புதிய விண்வெளி விழிப்புணர்வுத் திட்டத்தின் மூலம், "விண்வெளி வீரர் பிகாச்சு" (Astronaut Pikachu Plush) பொம்மை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று (ஐ.எஸ்.எஸ்) 67 நாட்கள் வெற்றிகரமாகத் தங்கித் திரும்பியுள்ளது.
விண்வெளியில் பிகாச்சுவின் 67 நாட்கள் பயணம்:
பயணக் காலம்: 2026 ஏப்ரல் 11 முதல் ஜூன் 17 வரை, பிகாச்சு பொம்மை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தது.
பூமியைச் சுற்றிய பயணம்: இந்த 67 நாட்களில் பிகாச்சு பூமியை சுமார் 1,040 முறை சுற்றி வந்துள்ளது.
விண்வெளிப் புகைப்படம்: இ.எஸ்.ஏ விண்வெளி வீராங்கனை 'சோஃபி அடெனோட்' (Sophie Adenot) என்பவருடன் விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு, விண்வெளி நிலையத்தின் 'கியூபோலா' (Cupola) என்ற பூமியைக் அழகாகக் காணக்கூடிய கண்ணாடி அறைக்கு நடுவே மிதந்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
ஏன் பிகாச்சுவை விண்வெளிக்கு அனுப்பியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ)?
விண்வெளி அறிவியல், கோள்கள், சூரிய குடும்பம் மற்றும் விண்வெளி வீரர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படும் 'உலக விண்வெளி வாரம் 2026' (World Space Week 2026) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விண்வெளிப் பயணம் அமைந்துள்ளது.
விஞ்ஞானமும் விளையாட்டு உலகமும் இணையும் புதிய புதுமை
1.சிறப்பு அறிவியல் கண்காட்சிகள்: ஐரோப்பாவில் உள்ள பல இ.எஸ்.ஏ மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் போகிமான் கதாபாத்திரங்களுடன் கூடிய விண்வெளி அறிவியல் கண்காட்சிகள் நடைபெற உள்ளன.'
2.போகிமான் கோ' (Pokémon GO) விளையாட்டில் பிகாச்சு: அக்டோபர் 4, 2026 முதல் ஏப்ரல் 30, 2027 வரை, உலகின் முக்கிய அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகங்களுக்குச் செல்பவர்கள், தங்கள் 'Pokémon GO' மொபைல் கேமில் 'விண்வெளி வீரர் பிகாச்சு' கதாபாத்திரத்தைக் கண்டறிந்து பிடிக்கும் வகையில் சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது பிகாச்சு எங்கே இருக்கிறது?
பிகாச்சுவின் விண்வெளிப் பயணம் கடந்த ஜூன் மாதமே முடிவடைந்து விட்டது. விண்வெளியில் பல மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்த அந்த பிகாச்சு பொம்மை பத்திரமாகப் பூமிக்குத் திரும்பிவிட்டது.
கற்பனைக் கதைகளில் மின்னல் சக்தியைப் பயன்படுத்தி அட்டகாசம் செய்யும் பிகாச்சு, நிஜ உலக விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிதந்தது, அறிவியல் வரலாற்றுக்கும் பாப் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு மறக்க முடியாத சுவாரஸ்யமான நிகழ்வாக மாறியுள்ளது.