அண்டார்டிகா பனி உருகுவதற்கு பென்குயின்களின் எச்சமும் காரணமா? புதிய ஆய்வில் திடுக்கிடும் தகவல்

அண்டார்டிகா பனி உருகுவதற்கு பென்குயின்களின் எச்சமும் காரணமா? புதிய ஆய்வில் திடுக்கிடும் தகவல்

அண்டார்டிகாவில் பென்குயின்களின் எச்சத்திலுள்ள ஊட்டச்சத்துக்களால் பனிப்பாசிகளின் வளர்ச்சி அதிகரித்து, பனிப்பரப்பு இருண்ட நிறமாக மாறுவதால் பனி உருகும் வேகம் தீவிரமடைகிறது.

அண்டார்டிகாவின் உறைபனிச் சூழலில் வாழும் பென்குயின்களின் எச்சம் (மலம்), அப்பகுதியின் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதற்கு மறைமுகக் காரணமாக அமைகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக (Journal of Geophysical Research: Biogeosciences) இதழில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கையின்படி, பென்குயின்களின் எச்சத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், பனியில் வளரும் பாசிகளுக்கு தேவையான உரம்போலச் செயல்பட்டு அவற்றின் வளர்ச்சியை வேகப்படுத்துகின்றன. புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு பாசிகள் அண்டார்டிகாவின் பனிப்பரப்புகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.

சத்துக்கள் கிடைக்காத வேளையில், இந்த பாசிகள் சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவப்பு நிறமாக மாறுகின்றன. ஆனால், பென்குயின் எச்சம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்போது, சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்வதற்காகப் பச்சையத்தை உற்பத்தி செய்து பச்சை நிறமாக மாற்றம் பெறுகின்றன.

இவ்வாறு பனிப்பரப்பில் பாசிகள் பரவி நிறமாற்றம் அடைவதால், வெண்மையான பனிப்பரப்பின் நிறம் மங்கி இருண்ட நிறமாக மாறுகிறது. வெண்மை நிறப் பனி சூரிய ஒளியை அப்படியே எதிரொலிக்கும் திறன் கொண்டது. ஆனால், பாசிகளால் பனிப்பரப்பு இருண்ட நிறமாக மாறும்போது, அது அதிக அளவிலான சூரிய வெப்பத்தை உறிஞ்சத் தொடங்குகிறது. இதன் விளைவாக, பனி உருகும் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது.

இது குறித்து ஆய்வாளர் அலீயா கான் கூறும்போது, அண்டார்டிகாவில் எதிர்காலத்தில் ஏற்பாட்டைக் கூடிய பனி உருகுதல் மற்றும் பனியற்ற நிலப்பரப்பு விரிவாக்கம் குறித்த கணிப்புகளில், வனவிலங்குகளுக்கும் பனிப் பாசிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு இதுவரை கருத்தில் கொள்ளப்படாத ஒரு முக்கியமான காரணியாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உயிரியல் மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாவிட்டால், கரையோரப் பனிப்பகுதிகள் எந்த அளவுக்கு வேகமாகக் கரையும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து ஆகிய இரு முக்கிய பனிப்பகுதிகளும் கடந்த 47 ஆண்டுகளில் சுமார் 11.3 டிரில்லியன் மெட்ரிக் டன் பனியை இழந்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 84 சதவீத பனி இழப்பு, மேல்பரப்பு உருகுவதை விட பனிப்பாறைகள் வேகமாகக் கடலில் சரிந்து விழுவதாலேயே நிகழ்கிறது.

அதேவேளையில், பென்குயின்களின் எச்சம் அண்டார்டிகாவின் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கு மற்றொரு வகையிலும் உதவுகிறது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்படும் படங்களின் வழியே, பென்குயின் எச்சம் படிந்துள்ள பெரிய இடங்களைக் கண்டறிந்து, அங்குள்ள ஏம்பரர் பென்குயின்களின் புதிய வாழ்விடங்களையும் தொகையையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.