வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் வாக்குரிமை! அரசின் நடவடிக்கை ஆரம்பம்
வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, இலங்கைக்கு வெளியே வசிக்கும் குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தவாறு வாக்களிப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்காக சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக அமைச்சரவை அனுமதியுடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடம் கருத்துகள், ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
வாக்காளர் பதிவு, தேர்தல் பிரசாரம், வாக்களிக்கும் நடைமுறைகள், வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளும் நாட்டின் ஜனநாயக தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் முறையான, வெளிப்படையான வாக்குரிமை நடைமுறையை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.