OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி!

OPEC நிதியத்திலிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தக் கடனானது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், அரச நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

குறித்த 30 மில்லியன் டொலர் நிதியில் 24 மில்லியன் டொலர் OPEC நிதியத்தின் சாதாரண மூலதன வளங்களிலிருந்தும், 6 மில்லியன் டொலர் விசேட மூலதன வளங்களிலிருந்தும் வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்த நிதியுதவியானது உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கைச் செயற்பாட்டின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிக்கு மேலதிகமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கடன் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.