சுரேஷ் சலே – அசாத் மௌலானா இடையே இரகசிய சந்திப்பா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளியாகும் முக்கிய தகவல்கள்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் புதிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலே மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா ஆகிய இருவரும் தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில், அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இருவரும் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே நவம்பர் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட 300 பக்கங்களுக்கும் அதிகமான விசாரணை அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்தமை தொடர்பான கடன் அட்டைத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சுரேஷ் சலே விசாரணையின்போது எவ்வித சித்திரவதைக்கும் உட்படுத்தப்படவில்லை என ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழு சமர்ப்பித்த அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இந்தப் புதிய தகவல்கள் வழக்கில் மேலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.