டைனோசர்களின் அழிவுக்குப் பின் தோன்றிய வௌவால்கள்: 65 மில்லியன் ஆண்டு கால பரிணாம ரகசியத்தை அவிழ்த்த புதிய ஆய்வு
டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் தோன்றிய வௌவால்கள், பறக்கும் திறனையும் எதிரொலி நுட்பத்தையும் பெற்று இரவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே பாலூட்டியாக பரிணமித்துள்ளன என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு தோன்றிய விசித்திர பாலூட்டியான வௌவால்கள், எவ்வாறு பறக்கும் ஆற்றலைப் பெற்றன என்பது குறித்த புதிய தகவல்களை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. 'நேச்சர்' இதழில் வெளியிடப்பட்ட இந்த மைல்கல் ஆய்வு, மரபணு மற்றும் புதைபடிவ ஆதாரங்களை இணைத்து வௌவால்களின் மிகத் துல்லியமான பரிணாம குடும்ப மரத்தை உருவாக்கியுள்ளது.
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கல் ஒன்று மோதியதில், பறக்க முடியாத டைனோசர்கள் முற்றிலும் அழிந்துபோயின. இந்த பேரழிவிற்குப் பிறகு, உலகின் சுற்றுச்சூழல் அமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த பேரழிவு நிகழ்ந்து சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வௌவால்கள் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் என இந்த ஆய்வு கூறுகிறது. இதுவரை வௌவால்களின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது வட அமெரிக்காவாக இருக்கலாம் என்றே கருதப்பட்டு வந்த நிலையில், தற்போதைய கண்டுபிடிப்பு அந்த பழைய நம்பிக்கைகளை மாற்றியமைத்துள்ளது.
பாலூட்டி இனங்களிலேயே இறக்கைகளை இறக்கடித்து, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் சுயமாக பறக்கும் திறன் கொண்ட ஒரே உயிரினம் வௌவால் மட்டுமே ஆகும். இவற்றின் இறக்கைகள் பறவைகளின் இறக்கைகளைப் போன்றவை அல்ல; மாறாக, நீண்ட விரல் எலும்புகளுக்கு இடையே மெல்லிய தோல் சவ்வு படர்ந்து உருவான மாறுபட்ட முன் கைகளாகும்.
இருப்பினும், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வௌவால்களின் மிக பழமையான புதைபடிவங்கள் 52 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையானவை. இதனால், முதன்முதலில் உருவான வௌவால்கள் தோற்றத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்பது குறித்து அறிவியலாளர்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. ஆரம்பகால வௌவால்கள் நீளமான விரல்களைப் பெறத் தொடங்கிய ‘மரம்வாழ் எலிகள்’ போல இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இவற்றுடன், இருட்டில் தடைகளை அறிவதற்கும் வேட்டையாடுவதற்கும் வௌவால்கள் பயன்படுத்தும் 'எக்கோலோகேஷன்' (Echolocation - எதிரொலி மூலம் இடமறியும் முறை) நுட்பத்தைப் பற்றியும் இந்த ஆய்வு விளக்குகிறது. வௌவால்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே பறக்கும் திறனும், இந்த எதிரொலி நுட்பமும் உருவானதாக தெரிகிறது. ஆனால், இதில் எது முதலில் உருவானது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழமையான புதைபடிவங்கள் அனைத்திலும் இந்த இரண்டு அம்சங்களும் ஏற்கனவே அமைந்திருந்ததால், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இடைநிலை உயிரினங்களின் புதைபடிவங்கள் கிடைத்தால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், பறக்கும் திறன் வௌவால்களை வானில் உயரச் செய்தது; அதேவேளையில், எதிரொலி நுட்பம் இரவு நேரத்தை அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதனாலேயே, எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் குறைந்த இரவுக் காலத்தில் வௌவால்களால் தடையின்றி வாழ முடிந்தது. ஐரோப்பாவில் தொடங்கிய இவைகளின் பயணம், காலப்போக்கில் ஆப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதும் பரவி இன்றியமையாத ஒரு உயிரினமாக உருவெடுத்துள்ளது.