த.வெ.க.வுக்கு ஆதரவா?- இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.சி.க
விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானபோது யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்கவில்லை. தி.மு.க. கூட்டணி 73 இடங்களும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்தன.
இவர்கள் இருவரையும் எதிர்த்து அரசியலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார். இதன் படி, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதரவு கேட்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் விஜய்க்கு உடனடியாக கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் விஜய்க்கு நேற்று ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம், 2 கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது.
தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டுதான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக குறையும். இந்த 107 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள், 2 கம்யூனிஸ்டுகள் சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் என 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நேற்று விஜய் 3வது முறையாக கவர்னர் அர்லேகரை சந்தித்து ஆதரவு கோரினார்.
இருப்பினும் இதுவரை விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று தனது முடிவை திருமாவளவன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வி.சி.க. அலுவலத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வர உள்ளதாக கூறப்பட்டது. இதனால் திருமாவளவன் தனது முடிவை அறிவிப்பார் என தமிழகமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவை அறிவிப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், திருமாவளவனின் முடிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த த.வெ.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.