அணு ஆயுத தயாரிப்பை கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

அணு ஆயுத தயாரிப்பை கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

சிங்கப்பூர்: ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் என்று ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் அமெரிக்கா, அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் சனிக்கிழமை சிங்கப்பூரில் அளித்த பேட்டியில், “போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை தொடர்வதிலும் உறுதியாக இருக்கிறது.

நாங்கள் ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கான அத்தனை திறமையும், பலமும் எங்களிடம் இருக்கிறது. சொல்லப் போனால் தேவைக்கு அதிகமாகவே தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய ராணுவத் தளவாட பலமானது ஈரானை தாண்டியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் போர் நெருக்கடியை சமாளிக்கும் அளவுக்கு சிறந்த இடத்தில் உள்ளது.

ஈரான் மோதலில் கவனமாக இருக்கும் நேரத்தில் இந்தோ - பசிபிக் பிரச்சினையையும் நாங்கள் உற்று கவனித்து வருகிறோம்.

எங்களால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். அந்த வகையில் நாங்கள் எங்கள் ராணுவ பலத்தை மெருகேற்றி வருகிறோம்.

இந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்றே அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்புகிறார். அதே வேளையில் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வசமாகக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். அதுவே அவரது பொறுமைக்கும் காரணம்” என்றார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை.

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேசிய அதிபர் ட்ரம்ப், “போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இறுதி முடிவை எட்டும் வகையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளதாகக் கூறினார்.

மிக முக்கியப் பிரச்சினையான அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான அமெரிக்க நிபந்தனைக்கு ஈரான் இன்னும் உடன்படாத நிலையில் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.