டெங்கு ஒழிப்புக்காக நாடு தழுவிய ரீதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை

டெங்கு ஒழிப்புக்காக நாடு தழுவிய ரீதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை

டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களை உள்ளடக்கி, இலங்கை இராணுவத்தினரால் இன்று (05) நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட நடவடிக்கை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் முழுமையான மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக இராணுவத்தின் பல்வேறு பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், பிரிகேட்டுகள் மற்றும் அலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2,026 இராணுவத்தினர் பங்கெடுத்துள்ளனர்.

கொழும்பு குணசிங்கபுர மற்றும் தனியார் பேருந்து நிலையம், புறக்கோட்டை மிதக்கும் சந்தை, களனிப்பொல, தெல்கொட பேருந்து நிலையம், பஞ்சிகாவத்தை அபேசிங்காராம விகாரை, காக்கைத் தீவு சிறுவர் பூங்கா, ஹோமாகம, கடுவெல, பத்தரமுல்ல, நவகமுவ, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் காலி, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல் அத்துகல, கேகாலை பேருந்து நிலையம், வென்னப்புவ மற்றும் பாலவிய உட்பட மேலும் பல பிரதேசங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது, டெங்கு கொசுக்கள் போதகாகும் இடங்களை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.