மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய அதிநவீன மமோகிராஃபி இயந்திரம்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய அதிநவீன மமோகிராஃபி இயந்திரம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 153 மில்லியன் பெறுமதியான ஒரு அதிநவீன மமோகிராஃபி இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட மார்பகம் தொடர்பான அசாதாரண நிலைகளை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு இந்த உபகரணம் பெரிதும் உதவுகிறது.

இதன் மூலம் பரிசோதனைத் திறனை அதிகரித்து, நோயறிதல் அறிக்கைகளை குறுகிய காலத்திற்குள் வழங்கவும், சிகிச்சை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முடியும். அரச வைத்தியசாலைகளில் நிலவும் தேவையை கருத்திற்கொண்டு, கொழும்பு, கராப்பிட்டிய, கண்டி, அனுராதபுரம் மற்றும் அபேக்சா வைத்தியசாலை ஆகிய முக்கிய வைத்தியசாலைகளுக்கு மொத்தம் ரூ. 765 மில்லியன் பெறுமதியான 5 மமோகிராஃபி இயந்திரங்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட்டதன் மூலம் வடமத்திய மாகாண மக்கள் மட்டுமன்றி, வவுனியா, குருநாகல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது நோயறிதல் பரிசோதனைகளை மிகவும் திறம்பட மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (HSEP) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் நிதிப் பங்களிப்பில், தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.