கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதத் தலை
கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இன்று (30.08.2026) காலை சுமார் 8 மணியளவில் மரவேலைப் பட்டறையின் உரிமையாளர் ஒருவர் குறித்த மனித தலையை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
உடலற்ற மனிதத்தலை
தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மரவேலைப் பட்டறையின் பின்புறம், ஆற்றங்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல காவல்துறையினர், காவல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணியான திருமதி சந்தமாலி வருகை தந்து, சம்பவ இட ஆய்வு ஒன்றை நடத்தினார்.
ஆய்வின்படி மீட்கப்பட்ட மனித தலை மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அதனை விலங்குகள் தின்று சேதப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.