பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாலிம்பட தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் தெலிஜ்ஜவில, கல்எந்தகுட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பஹந்துவே சிகன்யா மிபுனி என்ற சிறுமி ஆவார்.
சக மாணவின் கையை பிடித்து பாடிக் கொண்டிருந்தவேளை சம்பவம்
கடந்த 17ஆம் திகதி காலை பாடசாலைக்கு வந்த குறித்த மாணவி, ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையிலிருந்து வெளியே சென்று சக மாணவியின் கையைப் பிடித்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவியின் கையிலிருந்து நழுவி, அவள் மல்லாக்க தரையில் விழுந்தாள்.
மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவத்தை அடுத்து ஏனைய மாணவிகள் கூச்சலிட்டனர், உடனடியாக செயல்பட்ட ஆசிரியர்கள் இது குறித்து விசாரித்து, 1990 அம்புலன்ஸ் மூலம் சிறுமியை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவள் உயிரிழந்தாள். உயிரிழந்த சிறுமி சிறு வயதில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.