திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட்டத்தில் காவல்துறையினரால் குழப்பம்!
புதிய இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் சற்றுமுன் காவல்துறையினர் குழப்பம் ஏற்படுத்தியதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திடிரென வந்திருந்த காவல்துறையினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டிருந்தனர்.
ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு தெரிவிப்பு
குறிப்பாக ஒலிபெருக்கிகளை பாவிக்க முடியாது என்றும் ஒலிபெருக்கிகளை அகற்றுமாறும் காவல்நிலையத்திற்கு வந்து ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி பெறுமாறும் கூறியிருந்தனர்.
இதன்போது தாம் பல்கலைக்கழகத்திற்குள்ளே தான் ஒலிபெருக்கி பாவிப்பதாகவும் இதற்கான அனுமதி எடுக்க வேண்டுமாயின் உடன் அனுமதி தருவீர்களா என காவல்துறையினரிடம் போராட்டக்காரர்கள் கேட்டிருந்த நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து பொறுப்பதிகாரியிடம் கதைக்குமாறு காவல்துறையினர் கூறியிருந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் குழப்பம்
இதேவேளை சில தினங்களிற்கு முன்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்தில் பயன்படுத்திய ஒலிபெருக்கிகளை காவல்துறையினர் எடுத்துச்சென்ற நிலையில் பல தடவைகள் கேட்டும் அந்த ஒலிபெருக்கிகளை இதுவரை வழங்கவில்லை எனவும் அதற்கான அனுமதியும் இதுவரை கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக ஒலி பெருக்கிகளை கழற்றுமாறும் கூறியதால் முரண்பாடு ஏற்பட்டது.
இவ்வாறாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதால் பல்கலைக்கழக உண்ணாவிரத போராட்டத்தில் குழப்பமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். பல்கலையில் ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25) காலை முதல் மாலை வரை குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பசி இருந்து தாயக மண்ணுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது வருட நினைவு தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.