திலீபன் நினைவேந்தல் விவகாரம் : யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் இலங்கை காவல்துறையினர் தாக்கல் செய்த இரண்டு வழக்குகள் இன்று (02) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
நினைவேந்தலில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தியமை மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற போது உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணம் காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளனர்.
திருவுருவச் சிலை அகற்றம்
அத்துடன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையை கடந்த 27ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் காவல்துறையினர் அகற்றிச் சென்றிருந்தனர்.

இதேவேளை திலீபனின் திருவுருவச் சிலையை காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு எதிராக நல்லூரில் அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (30) மாலை 5 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் இன்று (02) மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வரவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.