உயிரிழந்ததாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட சிறுமி!

உயிரிழந்ததாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட சிறுமி!

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாட்டமாலா நாட்டில் உயிரிழந்ததாக கருதப்பட்டு அடக்கம் செய்ய சவப்பெட்டியில் கிடத்தப்பட்ட 15 வயது சிறுமி திடீரென எழுந்து குடிக்க தண்ணீர் கேட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி அண்மையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தந்தை சிறுமியை தூக்கி காரில் கிடத்தி வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக கிளம்பியுள்ளார்.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில், சிறுமியின் சுவாசத்தையும், நாடிதுடிப்பையும் சோதித்த தந்தை அவள் இறந்துவிட்டதாக முடிவு செய்திருக்கிறார்.

எனவே வைத்தியசாலைக்கு செல்லாமல் சிறுமியை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்த தந்தை, உறவினர்களை அழைத்து இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அடக்கம் செய்வதற்காக சிறுமியை ஒரு சவப்பெட்டியில் வைத்துள்ளனர். அப்போது 8 மணி நேரமாக மயக்கத்தில் இருந்த சிறுமி, திடீரென கண்விழித்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

இதை கண்டு இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

சிலர் இது கடவுளின் அற்புதம் என்று வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினர்.

சிறுமிக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்து சவப்பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே மீட்டனர்.