சிறிலங்கன் எயர்லைன்ஸில் சைபர் ஊடுருவல்: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

சிறிலங்கன் எயர்லைன்ஸில் சைபர் ஊடுருவல்: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

சிறிலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் கணினி மற்றும் மின்னஞ்சல் அமைப்புகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சைபர் பாதுகாப்பு மீறல் (Cybersecurity Breach) மற்றும் அது குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு (CAA) உடனடியாகத் தெரிவிக்கத் தவறியமை தொடர்பில் இரண்டு தனித்தனி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு அமைப்புகளுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவி, டார்க் வெப் (Dark Web) தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு 50,000 அமெரிக்க டொலர்களைக் கிரிப்டோ நாணயமாகக் கப்பமாகக் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

 

உத்தியோகபூர்வ அறிக்கை

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்து சிறிலங்கன் எயர்லைன்ஸ் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சிறிலங்கன் எயர்லைன்ஸில் சைபர் ஊடுருவல்: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை | Probe On Srilankan Airlines Cyber Breach

குறித்த அறிக்கையில், தங்களது தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஹேக் செய்யப்படவோ அல்லது வேறு தரப்பினரின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சைபர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சர்வதேச விமானச் சேவைகளின் கூட்டமைப்பான Oneworld, உறுப்பு விமான நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்திற்கான CarrierConnect பிணையத்திலிருந்து (Network) சிறிலங்கன் எயர்லைன்ஸ் அமைப்பைத் தற்காலிகமாகத் துண்டித்தது.

 

இயல்பு நிலை

இதையடுத்து, அதிகாரப்பூர்வத் தலையீட்டைத் தொடர்ந்து குறித்த இணைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டதாகப் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸில் சைபர் ஊடுருவல்: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை | Probe On Srilankan Airlines Cyber Breach

இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மன்றம் (Sri Lanka CERT) இது குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, உடனடியாக ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்குத் தெரிவிக்கத் தவறியமை தீவிர கவனத்திற்குரிய விடயமாக உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் ஜே.வி.பி (JVP) சார்பு நிறுவனங்களுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் சிறிலங்கன் எயர்லைன்ஸ் கிளைத் தலைவர் நிசால் அதிகாரி தெரிவிக்கையில், சிங்கப்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்த போதிலும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிர்வாகம் சுயாதீன தணிக்கையை நடத்தாது சம்பவத்தை மூடிமறைக்க முயன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.