கடற்படையால் பொறுப்பேற்கப்பட்ட படகில் 150 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்
கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இன்று காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு நேரில் சென்றிருந்ததுடன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் குறித்த போதைப்பொருள் தொகுதியில் 50 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 100 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த போதைப்பொருள் தொகுதியின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளில் கடத்திச் சென்ற உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து நேற்று (04) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
இதன்போது 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
இங்கு கடற்படையினருக்கு விசேட நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கும் முப்படைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் கடற்படையினர் மட்டுமே ரூ. 75 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளதுடன், முழு நாடும் ஒன்றாக திட்டத்தின் கீழ் ரூ. 109 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைத் கைப்பற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய அருண ஜயசேகர, 2026 ஆம் ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் மட்டும் 69 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, போதைப்பொருள் சோதனைகளில் 314,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,050 பேர் முக்கிய உறுப்பினர்கள் எனவும் தெரிவித்த அவர், கடற்படையினரால் போதைப்பொருட்களுடன் கூடிய 63 படகுகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவற்றுள் 11 நெடுநாள் படகுகள் அடங்குவதாகவும் 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்து நிறுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் கூறினார்.
கடத்தல்காரர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தப்பிக்க வழியில்லை என்றும் நாட்டின் எதிர்காலத்தைக் தீர்மானிப்பது கடத்தல்காரர்கள் அல்ல, பொதுமக்களே என்றும் அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் வழங்குமாறு அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.