வலி. வடக்கில் மக்களின் தனியார் காணிகளை இழப்பீடு வழங்கி சுவீகரிக்கத் திட்டமா? – மக்கள் சந்தேகம்!

வலி. வடக்கில் மக்களின் தனியார் காணிகளை இழப்பீடு வழங்கி சுவீகரிக்கத் திட்டமா? – மக்கள் சந்தேகம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விலைமதிப்பீட்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இதுவரை விடுவிக்கப்படாத தனியார் காணிகளை விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது மக்களின் காணிகளை இழப்பீடு வழங்கி சுவீகரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக இருக்குமா என வலி வடக்கு நில விடுவிப்புப் போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலி வடக்கில் சுமார் 2,500 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் இன்னமும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரண்டு ஏக்கருக்கும் குறைவான காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் காணிகளை மக்களிடமே மீள ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்தும் வலி வடக்கில் உள்ள பெரும்பாலான தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விலைமதிப்பீட்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளமை, அவற்றை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என மக்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது சம்மதமின்றி காணிகளுக்கு விலைமதிப்பீட்டு அதிகாரிகளை அனுப்பியமை கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு இழப்பீடு தேவையில்லை என்றும் தங்களது சொந்தக் காணிகளே மீளக் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் காணிகளை வேறு தரப்பினருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், காணி விடுவிப்பே தங்களது பிரதான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.