பெங்களூரு ஏர்போர்ட்டில் புதிய திட்டம்: இனி விமானம் பறப்பதும் இறங்குவதும் ரொம்ப ஈஸி

பெங்களூரு ஏர்போர்ட்டில் புதிய திட்டம்: இனி விமானம் பறப்பதும் இறங்குவதும் ரொம்ப ஈஸி

இந்த கலப்பு முறை அமலுக்கு வந்த பிறகு, இந்தத் திறன் மணி நேரத்திற்கு சுமார் 85 விமான இயக்கங்களாக உயரும். இதன் மூலம் விமான நிலையம் நாளொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை கையாள முடியும்.

டெல்லி விமான நிலையத்தைத் தொடர்ந்து, பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் (KIA) 'கலப்பு முறை' (Mixed-mode runway operations) விமான இயக்கத்தைக் கொண்டுவர சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் விமான நிலையத்தின் இயக்கத் திறன் சுமார் 42 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், இந்தியாவில் இந்த இயக்க முறையைப் பெறும் இரண்டாவது விமான நிலையம் என்ற பெருமையை பெங்களூரு பெறுகிறது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் (BIAL) சமர்ப்பித்த முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பெங்களூரு விமான நிலையத்தில் மணி நேரத்திற்கு சுமார் 60 விமான இயக்கங்கள் (30 வருகைகள், 30 புறப்பாடுகள்) மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த கலப்பு முறை அமலுக்கு வந்த பிறகு, இந்தத் திறன் மணி நேரத்திற்கு சுமார் 85 விமான இயக்கங்களாக உயரும். இதன் மூலம் விமான நிலையம் நாளொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை கையாள முடியும்.

இதுகுறித்து விமானத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த புதிய இயக்க முறை விமானங்களின் இயக்கத் திறனை மேம்படுத்துவதோடு, காத்திருப்பு மற்றும் டாக்ஸி நேரத்தைக் குறைக்கும்; எரிபொருள் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்து, விமானங்களின் நேரக்கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும்" என்று தெரிவித்தன.

கலப்பு முறை எவ்வாறு செயல்படும்?

இதுவரை பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள இரண்டு இணையான ஓடுபாதைகளும் தனித்தனி முறையில்தான் செயல்பட்டு வந்தன (ஒரு ஓடுபாதை வருகைக்கும், மற்றொரு ஓடுபாதை புறப்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது).

ஆனால், கலப்பு முறை செயல்பாட்டின் கீழ், பாதுகாப்பு தேவைகள், போக்குவரத்து நிலைமைகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் (ATC) ஒப்புதலுக்கு உட்பட்டு, இரண்டு ஓடுபாதைகளுமே வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் மிகவும் நெகிழ்வாகப் பயன்படுத்தப்படும். இது விமானங்களை வரிசைப்படுத்துவதிலும், ஓடுபாதையை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் விமானக் கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கும்.

விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் காத்திருப்பதும், புறப்படும் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதும் தவிர்க்கப்படுவதால் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படும். விமான நிறுவனங்களுக்குப் பயண நேரம் துல்லியமாவதுடன், பயணிகளுக்கும் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட்டு சிறந்த அனுபவம் கிடைக்கும். இருப்பினும், இதன் முழு பலன்களும் வானிலை நிலவரம், விமானப் போக்குவரத்து மற்றும் தரைவழி வசதிகளைப் பொறுத்தே அமையும்.

இந்த திட்டத்திற்குத் தேவையான கூடுதல் ஆதரவை வழங்கும் வகையில், பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் (BIAL) புதிய டாக்ஸிவேகள், கூடுதல் விமான நிறுத்துமிடங்கள் மற்றும் மேம்பட்ட விமான நிலைய இணைப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளது. 

மேற்கு குறுக்கு டாக்ஸிவே (western cross-taxiway) திட்டம் மற்றும் இரண்டாவது முனையத்தின் (Terminal 2) விரிவாக்கம் போன்ற பணிகளும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.