ரூ.7 கோடிக்கும் மேல் பணப்பரிமாற்றம்! போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பெண் கைது!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் தொடர்பில் 49 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக நான்கு வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், பிலியந்தலை பகுதியில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் பராமரிக்கப்பட்ட நான்கு கணக்குகள் ஊடாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்தக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மடபாத்த பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.