பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : தண்டனை காலத்தை நீடிக்க தமிழக அரசு நடவடிக்கை!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : தண்டனை காலத்தை நீடிக்க தமிழக அரசு நடவடிக்கை!

வரதட்சணை குறித்த மரண வழக்குகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இது குறித்து சட்டப் பேரவையில் விதி 110 கீழ் சில முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ள அவர், “வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு இப்போது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்க சட்டப் பிரிவு 304 பி வகை செய்கிறது. இந்த தண்டனைக் காலம் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

குற்ற நோக்கத்துடன் பெண்களின் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்வோருக்கு சட்டப் பிரிவு 354 -பி அடிப்படையில் குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றத்துக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகளும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலும் தண்டனை வழங்க வகை செய்யப்படும்.

தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை இரண்டாவது முறையாகவும் பின் தொடர்ந்து குற்றமிழைத்தால் இப்போது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் விலைக்கு வாங்குதல் போன்ற செயல்களுக்காக இப்போது அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலாக  குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் வரையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.