
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக் கதைகள் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இதில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள பாகத்தில் அவர் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘அருவி’ பட புகழ் அதிதி பாலன் நடித்துள்ளார்.
இந்நிலையில், குட்டி ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற பிப்.12-ந் தேதி திரையரங்குகளில் இந்த ஆந்தாலஜி படம் வெளியாக உள்ளது.