
யாழ்.வைத்தியசாலையில் நிலவும் குருதித்தட்டுப்பாடு - ஆவரங்கால் இளைஞர்களின் முதல் முயற்சி
ஆவரங்கால் ஒன்றியம் - பிரித்தானியா, ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியம் என்பன இணைந்து முதல் தடவையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் ஆவரங்கால் சிவன் கோவில் விழா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வினை ஆவரங்கால் சிவன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ ந.யோகேஸ்வரக் குருக்கள் மங்கள விளக்கேற்றிக் ஆரம்பித்து வைத்துள்ளா்.
இந்த இரத்ததான முகாமில் நான்கு யுவதிகள்உட்பட 42 பேர் இரத்ததானம் வழங்யுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் கே. ஸ்ரீபாஸ்கரன், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தங்கராஜா ரவினதாஸ் உள்ளிட்ட வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.
யாழில் இரத்தத் தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானமையைக் கருத்திற் கொண்டே இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதேவேளை, மேற்படி இரத்ததான முகாம் தொடர்பில் ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியத்தின் தலைவரும், வலி. கிழக்குப் பிரதேச சபை உறுப்பினருமான திருநாவுக்கரசு கமலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த இரத்ததானப் பணியை நாங்கள் முதல் தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இந்த இரத்ததான முகாம் நிகழ்வை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
ஆவரங்கால் ஒன்றியம் - பிரித்தானியா, ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியம் என்பன இணைந்து இரத்ததானப் பணிகளை மாத்திரம் செய்யவில்லை. ஆவரங்கால் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலப் பகுதியில் ஆவரங்கால் இளைஞர்கள் வீடுகள் தோறும் சென்று நிவாரணங்களை வழங்கியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி வெள்ளப் பெருக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதும் இந்த இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று பல உதவிகளை வழங்கினர். இன்னும் பல சேவைகளை வழங்கவுள்ளார்கள்.
அவர்களின் சேவைகளுக்கு என்றென்றும் எமது மக்கள் நன்றிக் கடன் உள்ளவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.