
யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்றையதினம் (30.10.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 26 மற்றும் 32 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவர்களில் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடனும், மற்றையவர் 120 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.