உல்லாசத்திற்கு வரமறுத்த இலங்கை ‘இன்ஸ்டா’ அழகி கொலை

உல்லாசத்திற்கு வரமறுத்த இலங்கை ‘இன்ஸ்டா’ அழகி கொலை

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள ‘கேட்வே எப்எல்-3’ நட்சத்திர விடுதியின் மதுபானக் கூடத்தில், போதையில் நடனமாடியபோது தங்களுடன் உல்லாசத்திற்கு வரமறுத்த விவகாரத்தில், இலங்கையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபல இளம்பெண் காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 17 வயதுடைய அவரது தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சைப் பதறவைக்கும் இக்கொலைச் சம்பவத்தின் முழு விபரங்கள் வருமாறு:

இலங்கை இறுதிப்போர்ச் சூழலின் போது தமிழகத்திற்கு அகதியாக வந்து, தற்போது விழுப்புரம் மாவட்டம் அனிச்சாங்குப்பம் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் கூலித்தொழிலாளி நகுலேஸ்வரனின் மகள் யான்சி (18). கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துவிட்டு சென்னையில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த இவர், இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டு பிரபலமாக விளங்கியுள்ளார்.

சென்னையிலுள்ள தனது இன்ஸ்டா தோழியான பவுசியாவைப் பார்ப்பதற்காகக் கடந்த 19ஆம் தேதி சென்னை வந்த யான்சி, தோழிகளுடன் நகரைச் சுற்றிவந்துள்ளார்.

கடந்த 30ஆம் தேதி இரவு, யான்சி மற்றும் அவரது தோழிகள் உட்பட 6 இளம் பெண்கள் கோயம்பேட்டிலுள்ள ‘கேட்வே எப்எல்-3’ விடுதியின் மதுபானக் கூடத்திற்குச் சென்றுள்ளனர். இந்த விடுதி பிரபல டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரும், தவெக நிர்வாகியுமான பாலாஜி என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), சூளைமேடு ஜோஷ்வா (19), நெற்குன்றம் கிஷோர் குமார் (19) மற்றும் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போதை கும்பலும் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தது.

பாரில் ஒலித்த ‘டிஜே’ இசைக்கு யான்சி மற்றும் அவரது தோழிகள் போதையில் நடனமாடிய போது, பாலகுரு மற்றும் சுமன் சக்திவேல் தரப்பினர் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளனர். திடீரென, "இன்று இரவு எங்களோடு தங்கி உல்லாசமாக இருக்க வேண்டும்" என அந்த 6 பெண்களையும் அக்கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.

இதற்கு 3 பெண்கள் மறுப்புத் தெரிவித்து அங்கிருந்து வெளியேற முயன்ற போது, போதை கும்பல் அவர்களின் கைகளைப் பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யான்சி, தனது தோழிகளைப் பாதுகாக்க அக்கும்பலைச் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விடுதிப் பாதுகாவலர்கள் (Bouncers) இரு தரப்பையும் சமாதானப்படுத்தி வெளியேற்றினர்.

விடுதிக்கு வெளியேயும் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து, யான்சி தனது தோழியான தீபிகாவின் (17) ஸ்கூட்டரிலும், மற்ற தோழிகள் இரு வேறு ஸ்கூட்டர்களிலும் திருவள்ளூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். எனினும், ஆத்திரமடைந்த பாலகுருவின் போதை கும்பல் தங்களது காரில் இவர்களை அதிவேகமாகப் பின்தொடர்ந்து விரட்டியுள்ளது.

கோயம்பேடு - திருமங்கலம் சாலையில் சென்றபோது, நிலைமை மோசமாவதை உணர்ந்த பெண்கள் கார் மீது கற்களை வீசித் தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், போதையின் உச்சத்திலிருந்த கும்பல், யான்சியும் தீபிகாவும் சென்ற ஸ்கூட்டர் மீது காரை மோதியது.

மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அத்தோடும் ஆத்திரம் தீராத அக்கும்பல், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கீழே கிடந்த யான்சி மீது மீண்டும் காரை ஏற்றிவிட்டுத் தப்பியோடியது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த கோயம்பேடு பொலிஸார், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 17 வயதுச் சிறுமி தீபிகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். யான்சியின் உடலும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதுபானக் கூடத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து இக்கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது உறுதியானது. கொலையாளிகள் காரின் பதிவு எண்ணைக் கழற்றிவிட்டு, கோயம்பேடு பூண்டு சந்தைப் பகுதியில் வாகனத்தை மறைத்துவிட்டுப் புதுச்சேரிக்குத் தப்பியோடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி பொலிஸாரின் உதவியுடன் காரை ஓட்டிய பாலகுரு (21), ஜோஷ்வா (19), கிஷோர் குமார் (19) ஆகிய 3 பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுமன் சக்திவேல் உள்ளிட்ட மேலும் 4 பேரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான அசம்பாவிதங்கள் அரங்கேறிய அந்த விடுதியின் மதுபானக் கூடத்திற்கு (Bar) மதுவிலக்கு ஆயத்தீர்வை அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர்.

அரசு விதிகளின்படி நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே பார்கள் இயங்க அனுமதி உள்ள நிலையில், இந்த விடுதி அதிகாலை 3 மணி வரை சட்டவிரோதமாக இயங்கியது ஏன்? மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாருக்குள் அனுமதித்தது எப்படி? என்பது குறித்து விடுதி உரிமையாளரான தவெக நிர்வாகி பாலாஜியிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"என் மகள் நடிகை போல் அழகாக இருப்பாளே, அவளைக் கொன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என அனிச்சாங்குப்பம் முகாமில் இருந்து வந்த யான்சியின் தாய் மேரி ஸ்டெல்லா மருத்துவமனையில் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது.