இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் கற்கோபுரம் உருவாவதற்கு 500 ஆண்டுகள் முன்பே கட்டப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான மரத்தாலான நினைவுச் சின்னத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வரலாற்றுக்கு முந்தைய அமைப்பு, 120 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்ட இரு பிரம்மாண்ட மரத்தூண்களைக் கொண்டு சூரியனின் நகர்வைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஸ்டோன்ஹெஞ்ச் போலவே இந்த ஆரம்பகால வடிவமும் கோடைகால மற்றும் குளிர்கால சூரிய மாற்ற நாட்களைத் துல்லியமாகக் குறிவைத்து வழிபடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விலங்குகளின் எலும்புகள்
இந்த அகழ்வாராய்ச்சியின் போது விலங்குகளின் எலும்புகள், மண்பாண்டங்கள் மற்றும் சூரிய வட்டைப் பிரதிபலிக்கும் அரிய வட்ட வடிவக் கத்தி போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இது ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்கியது உறுதியாகியுள்ளது.
வெசெக்ஸ் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் இந்தக் கண்டுபிடிப்பானது கற்கால மனிதர்களின் வானியல் அறிவு மற்றும் அவர்களின் வழிபாட்டுப் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.