மேசைப் பலகைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட ரூ. 15.8 கோடி ஹஷீஷ், கஞ்சா!

மேசைப் பலகைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட ரூ. 15.8 கோடி ஹஷீஷ், கஞ்சா!

- தாய்லாந்திலிருந்து அன்பளிப்பாக அனுப்பப்பட்ட மேசைப் பாகம்

- ராகமையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கைது

மேசைப் பலகைகளின் உட்பகுதியில் நுட்பமாக மறைக்கப்பட்டிருந்த ரூ. 158 மில்லியனுக்கும் (ரூ. 15.8 கோடி) அதிக தெரு மதிப்புடைய ஹஷீஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை இலங்கையின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அன்பளிப்புப் பொதி எனும் போர்வையில், தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மேசைப் பாகங்களை பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் வைத்துச் சோதனையிட்ட போது இவை சிக்கியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும், அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

பயணிகள் சேவைப் பிரிவின் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில், பிரதி சுங்கப் பணிப்பாளர் எம்.கே.ஆர். குமாரவினால், இச்சந்தேகத்திற்குரிய பொதிகள் கண்டறியப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சுங்கப் பயணிகள் சேவைப் பிரிவு மற்றும் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மேசைப் பலகைகளினுள் பொதி செய்யப்பட்டிருந்த 13,372 கிராம் (13.37 கி.கி) ஹஷீஷ் மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் தெரு மதிப்பு ரூ. 133.72 மில்லியன் (ரூ. 13.37 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2,428 கிராம் (2.42 கி.கி) கஞ்சா போதைப்பொருளும் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் தெரு மதிப்பு ரூ. 24.28 மில்லியன் (ரூ. 2.42 கோடி) என தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும், அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சி ஹேவா தெரிவித்தார்.