உக்ரைனில் பிரெஞ்சுப் படைகள்! ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அதிரடி மறுப்பு

உக்ரைனில் பிரெஞ்சுப் படைகள்! ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அதிரடி மறுப்பு

உக்ரைன் போரில் பிரான்ஸ் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உக்ரைனில் பிரெஞ்சு இராணுவத்தினர் சிலர் பணியாற்றி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அவர்களின் இருப்பு உக்ரைனுக்கு வழங்கப்படும் சாதாரண ஆதரவு அல்ல என்றும், அது போரில் நேரடியாகப் பங்கேற்பதற்கு சமமானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ, பிரான்ஸ் உக்ரைன் போரில் நேரடியாகப் போரிடும் நாடாக இல்லை என்றும், அவ்வாறு மாறும் எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனில் இருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினரின் பணிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என பிரான்ஸ் விளக்கியுள்ளது. அவர்கள் உக்ரைன் படையினருக்குப் பயிற்சி வழங்குதல், பிரான்ஸ் வழங்கியுள்ள இராணுவ உபகரணங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பணிகள் போர்முனையிலிருந்து தொலைவில் இடம்பெறுவதாகவும், பிரெஞ்சுப் படையினருக்கு நேரடியாகப் போரில் ஈடுபடும் நோக்கம் இல்லை என்றும் பிரான்ஸ் துணைப் பாதுகாப்பு அமைச்சர் அலிஸ் ரூஃபோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் இராணுவ ஆதரவு தொடர்பாக ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.