உக்ரைனுக்கு ஆதரவை நிறுத்துங்கள்! ஐரோப்பிய நாடுகளிடம் ஆவேசமாக வலியுறுத்திய டொனால்ட் ட்ரம்ப் – வெள்ளை மாளிகை வெளியிட்ட விளக்கம்!

உக்ரைனுக்கு ஆதரவை நிறுத்துங்கள்! ஐரோப்பிய நாடுகளிடம் ஆவேசமாக வலியுறுத்திய டொனால்ட் ட்ரம்ப் – வெள்ளை மாளிகை வெளியிட்ட விளக்கம்!

சர்வதேசம்:

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் நிதி உதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, பெர்லினில் கூடிய ஐரோப்பிய தலைவர்களுடன் விமானம் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு மேலும் பல பில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கான ஐரோப்பிய நாடுகளின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உக்ரைன் போருக்கு தொடர்ந்து நிதி செலவிடுவதற்குப் பதிலாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதித் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு ஏற்படக்கூடிய பாரிய நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பது தொடர்பிலும் ஐரோப்பிய நாடுகளிடையே ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகை விளக்கம்

எனினும், உக்ரைனைக் கைவிடுமாறு ட்ரம்ப் கோரவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாகவும், அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையில் புதிய கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளமை சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.