ஒருநாள் முத்தரப்பு தொடருக்காக இலங்கைக்கு பங்களாதேஷ் அழைப்பு
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு முன்னதான தயார்படுத்தலுக்காக, இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தமது நாட்டில் நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை முன்மொழிந்துள்ளது.
பாலியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் (ICC) கூட்டத்தின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும், இதற்கு இலங்கையிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தொடர் தொடர்பான இறுதி முடிவு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இவ்விரு நாடுகளின் கிரிக்கெட் பொறுப்பாளர்களும் இந்த முன்மொழிவைப் பரிசீலித்து வருகின்றனர்.
அவற்றின் இறுதி இணக்கம் கிடைத்த பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டிலேயே ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் நாடாகச் செயற்பட்டிருந்தது. அந்த தொடர் இருபதுக்கு - 20 வடிவத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பங்களாதேஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது.
தமீம் இக்பாலின் தலைமையின் கீழ் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யும் முதலாவது பிரதான சர்வதேசக் கிரிக்கெட் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.