யாழ். தீவகத்தின் போக்குவரத்து வரலாற்றை மாற்றிய முயற்சி!
தீவுப்பகுதி மக்கள் பண்ணைப்பாலம் இல்லாதிருந்த காலத்தில் பெரும் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தனர். பண்ணைப்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் மிகநீண்ட காலமாக தீவுப்பகுதி மக்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஆழம் குறைந்த அராலிக் கடற்பகுதியை பயன்படுத்தினார்கள்.
மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி மக்கள் யாழ்ப்பாணக் கடனீரேரியைக் கடந்து தமது போக்குவரத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக சிறிய படகுகளும் நவாய்களும் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் ஆயமும் பயன்படுத்தப்பட்டது.
முதன் முதலாக ஆங்கிலேய அரசாங்கம் 1883ஆம் ஆண்டில் மண்டைதீவிலுள்ள சிறுத்தீவிலிருந்து அலுப்பாந்திக்கும் சுங்கத்திணைக்களத்திற்கும் இடைப்பட்ட பகுதி வரை ஓர் பாலம் அமைத்தால் தீவக மக்கள் யாழ்ப்பாண நகரத்துடன் தொடர்பு கொள்வது சுலபமாக இருக்குமென எண்ணினர்.
(துறைவரி நிலையம் அலுப்பாந்தி எனப்பட்டது. அலுப்பாந்தி என்பது அல்பாந்திகா (Alfandica) என்ற போர்த்துக்கேயச் சொல்லின் சிதைவு அதுவும் அரபிச் சொல்லே.)
1883ஆம் ஆண்டில் சேர் வில்லியம் துவைனம் (Sir William Tynam) என்பவர் யாழ்ப்பாணத்தைப் பரிபாலனம் செய்து வந்தார். அவர் தீவுப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்கவெண்ணி அக்காலத்தில் 50000ரூபா செலவில் பண்ணைப்பாலத்தை அமைக்க தேசாதிபதிக்கு சிபார்சு செய்தார்.
யாழ்ப்பாண வைத்தியசாலை 1850 இல் ஆபத்துக்குதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society's Hospital) எனும் பெயரில் அமைக்கப்பட்ட காலத்தில் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய இவர், அக்காலத்தில் அரசாங்க அதிபராக விளங்கிய பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) அவர்களுக்கு துணையாக வைத்தியசாலைக் கட்டுமானப் பொறுப்புக்களில் அங்கம் வகித்தவர்.
இவரே பண்ணைப்பாலம் அமைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டு உழைத்தவர் என்று கூறலாம். இவருடைய மனோரதத்தில் இந்தியாவின் பம்பாய் நகரைப்போல் இலங்கையில் மண்டைதீவை பம்பாயைப் போன்றதொரு நகரமாக உருவாக்கவேண்டுமென்ற ஆவல் இவருக்கிருந்தது.
அவ்வாறே அலுப்பாந்தியுடன் முடிவடையும் புகையிரதத் தடத்தை தீவகத்தோடு இணைக்கவேண்டுமெனவும் நினைத்திருந்தார். எனினும் திறைசேரி இவர் கோரிய நிதியை வழங்கும் தன்மையற்றிருந்ததால் இத்திட்டங்கள் கைகூடவில்லை. அவருக்கு பின்னர் பொறுப்பேற்றவர்கள் இம்முயற்சியை மேற்கொண்டும் அவை தோல்வியிலேயே முடிந்தன. இவரைக் குறித்து யாழ்ப்பாண உத்தியோகர் லட்ஷணக் கும்மியில் துவைனம் அவர்கள் டைக் அவர்களின் மனம்கோணாது நடந்தவர் என்பதனை
“ஒக்றெடி எங்கள் றுவைனந்துரையுடன் உவாதிங்றன் நீதவான் றெசலிவ ரெல்லாம் தீர்க்கமா யந்த டயிக்குத் துரைமன மேற்க நடந்தவர் ஞானப் பெண்ணே."
என்று கூறுவதைக் காணலாம்.
1921 சித்திரை மாதம் தீவக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வை.துரைசுவாமி அனைத்து தீவுகளின் நலன் கருதி அராலியில் இப்பாலத்தை அமைக்க பரிந்துரைத்தார். இதனை அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
அல்லைப்பிட்டி உடையார் பிரிவின் கீழ் வசித்த 3000 மக்களுக்காக வேலணை, சரவணை, நாரந்தனை மற்றும் கரம்பொன் பிரிவில் காணப்பட்ட 12000 மக்களையும் நயினாதீவு மற்றும் புங்குடுதீவிலுள்ள 8000மக்கள் கரிசனை காட்டாதது குறித்து THE HINDU ORGAN பத்திரிக்கை 27.01.1927 அன்று வெளியான பதிவில் தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்தது.
நீண்டகாலம் இழுபறியாகத் தொடர்ந்த இச்சர்ச்சை 1956இல் பண்ணைப்பால வேலைகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து நிறைவுற்றது. இதனால் தீவகத்திற்கான பயணம் சற்று இலகுவாக இருந்தது. இதற்காக உழைத்தவர்களில் ஊர்காவற்றுறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்பிறட் தம்பிஐயா அவர்களின் பணி குறிப்பிடத்தக்கது.
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar