தென்மோடிக் கூத்துக் கலையின் தனிப்பெரும் ஆளுமை – அமிர்தகான அண்ணாவியார் ஆனாசி அருளப்பு

தென்மோடிக் கூத்துக் கலையின் தனிப்பெரும் ஆளுமை – அமிர்தகான அண்ணாவியார் ஆனாசி அருளப்பு

அண்ணாவியார் ஆனாசி அருளப்பு அவர்கள் 08.04.1927 இல் நாரந்தனை வடமேற்கு, ஊர்காவற்றுறையில் பிறந்தார். தனது கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் கற்ற இவர் 8ஆந் தரத்துடன் பாடசாலைக் கல்வியை முடிவுறுத்திக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் ஈடுபாடுடைய இவர்

தனது 15ஆவது வயதில் அண்ணாவியார் கட்டைச் செல்லையா அவர்களின் "செபமாலைப்பக்தர்கள்" என்ற நாட்டுக்கூத்தின் மூலம் கலையுலகில் பிரவேசித்தார்.

கமத்தொழிலையே தனது தொழிலாக கொண்டு வாழ்ந்த இவர் காலஞ்சென்ற அண்ணாவிமார்களான செல்லையா, சுண்டுக்குளியைச் சேர்ந்த அண்ணாவியார் பொன்னுத்துரை, பூந்தான் யோசேப்பு, ஆகியோரிடம் தென்மோடி நாட்டுக்கூத்துக்களைப் பயின்று கூத்துக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது குருக்களாக அண்ணாவியார் பொன்னுத்துரை அவர்களையும், பூந்தான் யோசேப்பு அவர்களையும் கொண்டு செயலாற்றினார்.

இவர் நடித்த நாட்டுக்கூத்துகள் வரிசையில்

சங்கிலியன், சம்பேதுறு சம்பாவிலு,கருங்குயில் குன்றத்துக் கொலை, ஞான சவுந்தரி, திருஞானதீபன், தருமப்பிரகாசன், செபஸ்தியார் முதலாவை சிறப்பிடம்பெறுகின்றன.

தனது மாமனாரும் நாட்டுக்கூத்துக் குருவுமான பூந்தான் யோசேப்பு அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துக்களை ஆற்றிவந்த இவர் அண்ணாவியாராக உருவெடுத்த பின்னர் சம்பேதுருவார், தர்மப்பிரகாசன்,எஸ்தாக்கியார்,ஏழை படும்பாடு,ஞானசவுந்தரி,இராஜராஜ சோழன்,பண்டாரவன்னியன்,செபஸ்தியார்,அன்னை வேளாங்கண்ணி முதலான கூத்துக்களை நெறியாள்கை செய்தார்.

1977-ம் ஆண்டு கொழும்பு மாநகரில் புனித அந்தோனியார் கல்லூரி தென்னிலங்கைக்கிளையினரின் சார்பில் மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்பிறட் தம்பிஐயா அவர்கள் "அமிர்தகான அண்ணாவி'' என்னும் பட்டம் வழங்கி கெளரவித்தார். கூத்தையறியாத கொழும்பு மாநகர்வாழ் நடிகர்ளுக்கு பயிற்றுவித்து நம்பிக்கையூட்டி அவர்களைக்கொண்டு கூத்துக்கலைக்கு அணிசேர்த்தார்.

1978-இல் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற அன்னை வேளாங்கண்ணி நாட்டுக்கூத்தில் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி நாடக ரத்தினம் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இக்கூத்து பிரமாண்டமான மேடையமைப்புடன் போர்த்துக்கேயர் கப்பலிலிருந்து கரைசேரும் காட்சிகள் மக்களிடையே பிரமிப்பையும் பெருவியப்பூட்டுவனவாக அமைந்ததாக நேரிற் கண்டோர் பகர்கின்றனர்.

1975-ல் "செபஸ்தியார் நாட்டுக்கூத்தின் போது மேன்மைதங்கிய ஆயர் தியோகுப்பிள்ளை அவர்களினால் பொன்னாடை போர்த்தி "நாடகக் காவலர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1993இல் திருமறைக்கலாமன்றமும் கலைஞர் கௌரவிப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.

அண்ணாவியார் குறித்து காவலூர்க்கவிஞர் ஞா.ம. செல்வராசா அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்.

"அண்ணாவியார்' என்று எல்லோராலும் நன்கறியப்படும் திரு. அ. அருளப்பு அவர்கள், ஊர்காவற்றுறை வடக்கு நாரந்தனையைத் தாயகமாகக் கொண்டவர். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர். 1950-ம் ஆண்டிலிருந்தே நாடக (நாட்டுக்கூத்து) நடிகராகத் திகழ்ந்து, பல ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நாற்பத்தைந்து வயது நிரம்பாதவராயிருந்தும், இவரது திறமையால் பல நாடகங்களைப் பழக்கி அரங்கேற்றம் செய்துள்ளார்.

இம்மனுவேல், தருமப்பிரகாசன், எஸ்தாக்கியார், விஜய மனோகரன், கருங்குயிற் குன்றத்துக் கொலை, செனுகப்பு, திருஞானதீபன் முதலாம் நாடகங்கள் குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகங்கள் யாவும் ஆலயக் கட்டிட நிதிக்காக நடிக்கப்பட்டனவாகும். சமீபத்தில் எஸ்தாக்கியார், செனுகப்பு ஆகிய நாடகங்கள் புனித அந்தோனியார் பாடசாலை நிதிக்காகவும், கருங்குயிற் குன்றத்துக் கொலை, இம்மானுவேல், தருமப்பிரகாசன் முதலாம் நாடகங்கள் சென். மேரிஸ் பெண் பாடசாலைக் கைத் தொழில் நிதிக்காகப் பெண்மணிகளாலும் அரங்கேற்றம் செய்யப்பெற்றன. தற்போது ஊர்காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டுவிழாவிற்காக கொழும்பில் வதியும் காவலூர் பழைய மாணவர்களால்நடித்துக் காண்பிக்கப்படும் ஞானசவுந்தரி நாடகமும் இவராலேயே பழக்கப்பட்டதாகும். என்னாற் புதிதாகப் பாடப்பெற்ற இந்நாடகத்திற்கு இராகங்கள் கொடுக்கப்பட்ட தும் இவராலேயாம்." என்கிறார்.

பெண்கள் பெரிதும் நாட்டுக்கூத்துக்களை மேடையேறி ஆற்றாத காலத்திலேயே முழுதும் பெண்களால் நடிக்கப்பெற்ற கூத்துக்களை அரங்கேற்றிய பெருமை அண்ணாவியாருக்கு உண்டு. இவருடைய நெறியாள்கையில் அரங்காடியோர் இன்றும் ஊர்காவற்றுறை மண்ணில் வாழ்கின்றனர். அவர்கள் தம் நாட்டுக்கூத்துக்குருவை நன்றியுடன் நினைக்கின்றனர்.

1990ஆம் ஆண்டு தீவக மக்கள் இடம்பெயர்ந்து அரியாலையில் வசித்த காலங்களில் பண்டாரவன்னியன், ஞானசவுந்தரி, திருஞானதீபன், கருங்குயிற்குன்றத்துக்கொலை,எஸ்தாக்கியார், தருமபிரகாசன், யூதாததேயு முதலான நாட்டுக்கூத்துக்களை, 1992-1994ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தில் மேடையேற்றினார். அன்னார் 2001இல் இறைபதமேகினார்.

மூலாதாரங்கள்

1999இல் வாழ்ந்துகொண்டிருக்கும் இசைநாடக கூத்து மூத்த கலைஞர் வரலாறு

ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து

பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து

அலைமொழி-03
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar