இரத்தினக்கல்லை மறைக்க விழுங்கிய நபர்! இறுதியில் வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு வந்த இரகசியம்
இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கம் நடத்தி வரும் நபரொருவர், சுரங்கத்தில் கண்டெடுத்த இரத்தினக்கல்லை மறைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் சுரங்கம் தோண்டும்போது கண்டெடுத்த இரத்தினக்கல்லை திடீரென விழுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொண்டையில் சிக்கிய இரத்தினக்கல்
இரத்தினக்கல்லை விழுங்கிய நிலையில் அது தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும், அதனை வெளியே எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்றால் தனது இரகசியம் வெளிப்பட்டுவிடும் என அஞ்சிய அவர், கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சென்று தொண்டையில் கல் சிக்கியுள்ளதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளார்.
பொலிஸாருக்கு தெரியவந்த சம்பவம்
குறித்த நபரின் தொண்டையில் சிக்கியிருந்த இரத்தினக்கல்லை அகற்றுவதற்காக வைத்தியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, இரத்தினபுரி வைத்தியசாலையைத் தவிர்த்து கண்டி வைத்தியசாலைக்கு வந்ததன் பின்னணியில் இருந்த இரகசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சைக்காக குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து வெலிசர பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.