அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கள் பெயரில் உள்ள நிதி குறித்து உறுதிமொழிப் பத்திரம் (affidavit) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பான கணக்கெடுப்புகளின் போது, சிலர் தங்கள் நிதிச் சொத்துக்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கோட்ட வெலகெதர தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது நன்மைகளைப் பெறுபவர்கள், புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அஸ்வெசும தொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளவர்கள் அனைவரும் இந்த உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவசியமான நடவடிக்கை
அத்துடன் சிலர் வட்டிக்குக் கடன் வழங்குதல் போன்ற வெளிப்படுத்தப்படாத வருமான வழிகள் மூலம் பணம் ஈட்டுவதாகவும், சாதாரண கணக்கெடுப்புகளின் போது தெரியவராத வகையில் வங்கிக் கணக்குகளில் பணத்தைச் சேமித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இத்தகைய மறைக்கப்பட்ட நிதி குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் எழுந்தாலோ அல்லது தகவல்கள் கண்டறியப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க அனுமதி அளிக்கும் வகையிலான உறுதிமொழிப் பத்திரத்தை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மிகவும் தேவைப்படுபவர்களுக்கு இந்த நிதி நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வது தங்கள் பொறுப்பு என்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.