
முல்லைத்தீவில் வெடி விபத்து- பொலிஸாரிடமிருந்து மறைக்கப்பட்ட உண்மை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போதே தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமுற்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தின் வனப்பகுதியில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக சட்டவிரோத இடியன் துப்பாக்கியை கொண்டு சென்று தயார்ப்படுத்திய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதனையடுத்து காயத்திற்கு இரகசியமாக மருந்து எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார். குறித்த விடயம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அதற்குரிய குண்டு வகைகளை என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் குமுழமுனை 6 ம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.