
யாழில் மாணவியரின் பாதுகாப்புக்கு விசேட நடைமுறை அறிமுகம்...
யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட, சிரேஷ்ட பிரதி கால்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினர் மீதான குற்றங்களை குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும்.
இதனை வகுப்பு ஆசிரியர் நிர்வகிப்பார்.
அக்குழுவில் மாணவிகளின் வரவு உள்ளிட்ட அவதானிப்புக்களை ஆசிரியர் பதிவிடுவார்.
இதன்மூலம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகள் குறித்த விடயங்கள் தெரியவரும்.
அத்துடன், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விபரங்கள், சாரதிகளின் கைபேசி இலக்கங்கள் போன்றவையும் இக்குழுவில் பகிரப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வருவதுடன், இந்தக் குழுக்கள் உரிய காவல் நிலைய பொறுப்பதிகாரிகளால், மேற்பார்வை செய்யப்படும் என மாவட்ட காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.