
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மைத்திரி விஜயம்...
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அதிபர், சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று (01.07.2023) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
அவரைபோதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.
சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதிபராக இருந்த காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார்.
இதன்போது இன்று காலை பிரசவித்த ஆண் குழந்தையொன்றுக்கு அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தார். வைத்தியசாலையின் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மைத்திரிபால சிறிசேன, யாழ் மாவட்ட மருத்துவ துறையின் வரலாறு தொடர்பாக ஆர்வமாக கேட்டறிந்தார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே ,முன்னாள் பிரதி நீதி அமைச்சரும், சிறி லங்கா சுதந்திர கட்சியின் பொருளாருமான நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.