யாழ்ப்பாணத்தில் உள்ள கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்களின் உடல்கள் -அதிர்ச்சி தகவல்...

யாழ்ப்பாணத்தில் உள்ள கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்களின் உடல்கள் -அதிர்ச்சி தகவல்...

யாழ்ப்பாணம் மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (07.07.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாயில் பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

மண்கும்பான் அல்லைப்பிட்டி வேலணையிலிருந்து கலைத்து வரப்பட்ட 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கிருக்கின்ற தோமையார் ஆலய முன் கிணற்றிலே கொலை செய்யப்பட்டு போடப்பட்டுள்ள நிலையில், 60 இற்கும் மேற்பட்டோருடைய எலும்புக்கூடுகளோடு சேர்ந்த உடல்கள் இப்போதும் அங்கு இருக்கின்றன.

இதன் காரணமாகவே சிறி லங்கா இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள். மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.