தரமற்ற மருந்துகளால் நோயாளர் உயிரிழக்கும் அபாயம் - அரசை எச்சரிக்கும் அதிகாரிகள்
தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்தமையால் மருத்துவமனைக் கட்டமைப்பில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இரு முறை சிந்திக்க வேண்டியுள்ளது.

மருந்துகளின் தரம் தொடர்பான கருத்துகளை அரச தரப்பு தவிர்த்து வருகிறது. பொறுப்புக் கூறலிலிருந்தும் விலகியுள்ளது.
நாட்டிலிருந்து பெருமளவான மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையில் மருத்துவமனைகளிலும் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ள போதும் மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்குவதிலும் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மருத்துவர் பற்றாக்குறை உள்ள போதும் சகல மருத்துவமனைகளிலும் நோயாளிகளை கருத்தில் கொண்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ள 'இலங்கை விசேட மருத்துவ சேவை' என்ற புதிய கட்டமைப்பை உருவாக்குமாறு நாம் முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் வசதிகள் குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
எனினும் செயல்பாட்டு ரீதியான எந்த முன்னேற்றங்களையும் நாம் காணவில்லை.- என்றார்.