8 மாத குழந்தைக்காக 100 ஜோடி காது அடைப்பான்கள் வாங்கிய தந்தை... இணையத்தை நெகிழ வைத்த மனிதநேயம்!
சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்திலிருந்து குவாங்சி (Guangxi) நோக்கி இரவு விமானத்தில் பயணம் செய்த சென் (Chen) என்ற இளம் தந்தை, தனது 8 மாத குழந்தை மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே 100 ஜோடி காது அடைப்பான்களை (Earplugs) வாங்கி வைத்திருந்தார்.
விமானம் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தால் குழந்தை அழக்கூடும் என்று நினைத்த அவர், விமானத்தில் ஏறியதும் கையில் காது அடைப்பான்கள் இருந்த பையுடன் ஒவ்வொரு பயணியிடமும் சென்று, "என் குழந்தை அழுதால் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று முன்கூட்டியே மன்னிப்பு கேட்டார். அதோடு, சத்தத்தை குறைக்க காது அடைப்பான்களையும் வழங்கினார்.
இந்த அன்பான செயலைக் கண்டு நெகிழ்ந்த பெரும்பாலான பயணிகள், "குழந்தை அழுவது இயல்பான விஷயம். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று அவரை ஆறுதல் கூறினர். அதனால், அவர் கொண்டுவந்த 100 ஜோடிகளில் சுமார் 20 ஜோடிகள் மட்டுமே வழங்கப்பட்டன; மற்றவர்கள் மரியாதையுடன் மறுத்துவிட்டனர்.
ஆச்சரியமாக, அந்த 8 மாத குழந்தை முழு பயணத்திலும் மிகவும் அமைதியாகவே இருந்தது.
பயன்படுத்தப்படாத காது அடைப்பான்களை, திரும்பும் பயணத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு விமானப் பணியாளர்களிடம் சென் ஒப்படைத்தார். இதுபோன்ற பொதுநல எண்ணம் கொண்ட செயல்களை இணையத்தில் பார்த்ததே தனக்கு இந்த யோசனையைத் தந்ததாகவும் அவர் கூறினார்.
ஒரு சிறிய அக்கறை... நூறு பேரின் மனதையும் வெல்ல முடியும் என்பதை இந்த தந்தை நிரூபித்துள்ளார்.