"இலவம் பஞ்சு மரம் வீட்ல இருந்தா குடும்பம் பஞ்சாய்ப் போகும்னு சொல்றாங்களே... உண்மையா தாத்தா?"
கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டிருந்த பெரிய இலவ மரத்தைப் பார்த்தபடியே, கையில் டீ டம்ளரோடு தாத்தாவிடம் கேட்டான் கார்த்திக்.
தாத்தா மெதுவாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, டீயை ஒரு மடக்கு குடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார்:
"அடடே... பழமொழியை அப்படியே தப்பா புரிஞ்சுகிட்ட தலைமுறைடா நீங்க!
முன்னாடிலாம் கிராமங்கள்ல வீட்டைச் சுத்தி என்ன மரம் வளர்க்கணும்னு ஒரு கணக்கு வச்சிருந்தாங்க. இலவ மரம் ரொம்ப உயரமா, பிரம்மாண்டமா வளரக்கூடிய ஒரு மரம். அதுல வர்ற காய் முத்தி வெடிக்கும் போது, பஞ்சுங்க காத்துல பறந்து வீடு முழுக்க விழும்.
அந்தப் பஞ்சுல சின்னச் சின்ன விதைகள் இருக்கும். காத்துல பறந்து வர்ற அந்தப் பஞ்சும் விதைகளும் கிணத்துத் தண்ணில விழுந்தா தண்ணி பாழாயிடும். சமையல் பண்ற இடத்துல, சாப்பிடுற தட்டுலனு எல்லா இடத்துலேயும் பஞ்சு போய் விழும். மூச்சு விடும்போது சுவாசக் குழாய்க்குள்ள போய் ஆஸ்துமா, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளையும் உண்டு பண்ணும்.
அதைவிட முக்கியமா... அந்தப் பஞ்சு காத்துல பறந்து ஊர் முழுக்க போயி விழும். 'என்னப்பா உன் வீட்டு மரத்துப் பஞ்சு வந்து என் வீட்டுத் திண்ணை முழுக்க குப்பையா கிடக்கு!'ன்னு பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவான்.
இப்படி வீட்டுக்குள்ளயும் தொந்தரவு, பக்கத்து வீட்டுக்காரனோடயும் சண்டை... இதனால குடும்பத்துல நிம்மதி போயி, 'குடும்பமே பஞ்சு பஞ்சா பறந்துடும்' (அதாவது குடும்ப அமைதி குலைஞ்சிடும்) அப்படின்னு சொன்னாங்க.
காலப்போக்குல மக்கள் 'குடும்பம் பஞ்சாய்ப் பறக்கும்'ங்கிறதை 'குடும்பமே அழிஞ்சு போயிடும்'னு ஏதோ ஒரு மூடநம்பிக்கையா மாத்திட்டாங்க!"
கார்த்திக் ஆச்சரியத்தோடு பார்த்தான்.
"அப்போ இந்த மரத்தை வளர்க்கவே கூடாதா தாத்தா?"
"தாராளமா வளர்க்கலாம் கார்த்தி! ஆனா அதை வீட்டுக்கு நடுவுலயோ, கொல்லைப்புறத்துல வீட்டுக்கு பக்கத்துலயோ வளர்க்கக் கூடாது. தோப்பிலையோ, காட்டுப் பகுதியிலையோ, வீட்டை விட்டு தள்ளி கொஞ்சம் தாராளமான இடத்துலையோ வளர்க்கலாம்.
இயற்கை தந்தது எதுவுமே கெடுதல் இல்லைடா. நாம அதை எங்க, எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்!"
தாத்தா சொல்லி முடித்தபோது, காற்றில் மிதந்து வந்த ஒரு சிறு பஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்தது. இம்முறை கார்த்திக்குக்கு அது பயத்தைத்தரவில்லை... முன்னோர்களின் வாழ்வியல் அறிவை நினைத்து வியப்பையே தந்தது!
பின்குறிப்பு:
நமது முன்னோர்கள் சொன்ன பல 'மூடநம்பிக்கைகளுக்கு' பின்னால் மிகப்பெரிய 'அறிவியல் மற்றும் வாழ்வியல் காரணங்கள்' ஒளிந்திருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொள்வோம்!